Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

Monday, January 5, 2009

கிளிநொச்சி

இன்று உலகத்தமிழர் நாவெல்லாம் உச்சரிக்கும் ஒரே பெயர் கிளிநொச்சி. காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகரம் போல இருந்த அழகிய மாவட்டத்தை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து விட்டது. இது இப்போதைக்கு வெகுவாக பேசப்படப்போகின்ற ஒரு விடயம். எல்லோரும் தமது தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதாவது "ஏன் விடுதலைப்புலிகள் பின்வாங்கினார்கள்?". நிற்க.

சமாதான காலத்தில் இந்த கிளிநொச்சி நகரமே அனைத்துலக தொடர்பாடலுக்குமான முக்கிய நகரமாக இருந்தது. இதனை விடுதலைப் புலிகள் நன்கு திட்டமிட்டு அசத்தலான கட்டுமானங்களுடன் அழகாக எழுச்சி கொள்ள வைத்தனர். வெளிநாட்டு இராஜதந்திரிகளின் சந்திப்புகள், மீள்கட்டுமான கலந்துரையாடல், புலம்பெயர் தமிழரின் வருகை என இந்த நகரம் எப்போதும் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது.

ஏ-9 நெடுஞ்சாலையில் செல்லும் போதே நாம் இதனை கண்கூடாக காணலாம். தமிழீழ அரசியல் துறை நடுவப்பணியகம், தமிழீழ காவல்துறைக்கான நடுவப்பணியகம், தமிழீழ நீதிமன்று, சமாதானச் செயலகம் என எல்லாம் இந்த நெடுஞ்சாலைகளை அண்டியதாக இருந்தது. இப்படி எழுச்சியுறும் நகரம் வீழ்ச்சியடையும் என எவரும் நினைக்கவில்லை.

இப்போது இந்த நகரம் இராணுவம் வசம். ஆள் அரவம் அற்ற ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. போரியல் முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்ற ஆராய எனக்கு தெரியாது. பரந்தன் சமரில் விடுதலைப் புலிகள் சடுதியாக பின்னகர்வை மேற்கொள்ள, கிளிநொச்சியின் ஸ்திரத்தன்மை வலுவிழக்க, அது இராணுவ வசம் இலகுவாக வீழ்ந்தது.

வடக்கிலேயும் சரி கிழக்கிலேயும் சரி நிச்சயமாக இராணுவத்தின் பாதைகளை விடுதலைப் புலிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இது இராணுவத்தின் பலத்தினால் கிடைக்கும் வெற்றியல்ல. அதுக்காக இராணுவம் பலகீனப்பட்டதென்பதல்ல. கிளிநொச்சி இராணுவம் கைகளில் வீழ வேணுமா? அல்லது வீழும் காலம் தாமதமாக வேணுமா? எல்லாமே விடுதலை புலிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் கிளிநொச்சியை விட்டு பின்னகர்கிறார்கள் எனும் போது எதிரிக்கு எந்த தடயமும் கிடைக்கக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார்கள். மக்களும் தமக்கு தேவையான எல்லாவற்றையும் அப்புறப்படுத்திவிட்டார்கள். கடைகள் கூட சுருக்கு கதவுகள், கூரைகள் எல்லாம் கழற்றப்பட்டு பிறிதோர் இடத்துக்கு நகர்த்தப்பட்டு விட்டது. இது இராணுவம் வெளியிட்ட புகைப்படங்களில் கண்கூடாகத் தெரிகிறது.

எனவே இராணுவத்தின் பலமான தாக்குதலின் பின்னர் கிளிநொச்சி வீழவில்லை என்பது உறுதி. ஏனைய சண்டைகளில் கூட இராணுவம் விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் கிளிநொச்சி மீதான கடைசி சண்டையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே கிளிநொச்சியை கைவிடுவது என விடுதலைப் புலிகள் நன்கு தீர்மானித்து திட்டமிட்டு பின்னகர்ந்திடுக்கிறார்கள். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதனை எல்லோரும் நன்கு உணர்வார்கள்.

அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே! தமிழனுக்கென்றொரு நாடு இல்லை. அதே நேரத்தில் தமிழன் இல்லாத நாடும் இல்லை. நாம் மிக விழிப்பாக இருந்து இந்த தருணத்தில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற எம்மால் ஆன பங்களிப்புகளை செய்யவேண்டும். இப்படி என்ற உடன் யாரும் பணத்தை முன்னிறுத்த வேண்டாம். அனைத்து தேசத்திலும் வாழும் மக்களினதும், எமது தாயகத்தில் இருந்து அந்நிய ஆக்கிரமிப்புக்குள் சிக்கி தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கின்ற தாயக உறவுகளினதும், எல்லையிலே எதிரியோடு சமராடி எமது தேசத்தை காத்துக்கொண்டிருக்கின்ற எம்களப் போராளிகளினதும் உளவுரனை பாதுக்காக்க வேண்டிய தலையாய கடமை எம்மிடம் இருக்கின்றது. அன்பார்ந்த தேசத்தின் உறவுகளே! உங்களால் இப்போதைக்கு எது முடியுமோ?அதை செய்யுங்கள். அல்லது பொறுப்பானவர்கள் சொல்லுவதை கேட்டு செய்யுங்கள்.

கோலமிட்ட வாசலில் எதிரியின் துப்பாக்கி துளைத்து உறவுகளின் இரத்தக் கோலங்கள் அங்கே. நாம் எதை செய்கிறோம். நாட்டிற்காக எதை செய்தோம். இப்படியான கேள்விகளை எம்முள்ளே கேட்டு, விடுதலையினை விரைவு படுத்துவோம்.

எல்லோருக்கும் மனதிலே ஒரு எண்ணம். சரி நாம் இதை செய்தால் விடுதலைப்புலிகள் இதை செய்வார்களா. எல்லோரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். 1998 ம் ஆண்டு இதைவிட மோசமான நிலையில் விடுதலைப் போராட்டம் இருந்தது. மிகச்சிறிய ஒரு செவ்வக வடிவிலான பெட்டி நிலப்பரப்பு மட்டும்தான் இருந்தது. அப்போது கடற்பரப்பு கூட பெரிதாக விடுதலைப் புலிகளின் கைகளில் இல்லை. அப்போதிருந்த ஆயுத, ஆட் பலங்களை வீட இப்போது அதிகம். மிக நவீன ஆயுதங்கள். எல்லாவற்றிற்கும் சிகரமாக வான்படை உள்ளது. இன்னமும் களத்திலே மிக முக்கிய படையணிகள் இறக்கப்படவில்லை. முழுமையாக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. ஏன் நாம் பயப்பட வேண்டும். ஏன் நாம் குழம்ப வேண்டும்.

அன்பார்ந்த மக்களே! சற்று சிந்திப்போம். விடுதலைப் புலிகள் இப்போது சிறு பிரதேசத்துக்குள் தான். உண்மைதான். ஆனால் இந்த அமுக்கம் வெடிக்கும். அதை படையினர் தாங்குவாரா என்பதுதான் கேள்வி. என்னதான் உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்கள் இருந்தாலும். என்னதான் உலக நாடுகள் முண்டு கொடுத்தாலும் எமது மனோபலத்திற்கு முன்னால் எல்லாம் தூசி. உங்கள் ஆதரவுக்கு முன்னால் எல்லாம் பொடியாகி போய்விடும். இன்றைய தமிழகத்தின் எழுச்சி அதே போன்று புலம் பெயர் நாடுகளின் எழுச்சி மிக்க பொங்குதமிழ் நிகழ்வுகள் என எல்லாம் எமது ஆதரவுக்குரல்களே.

இது போன்று இப்போது தேவை உளவுரனை காக்கும் வகையிலான எமது நேசக்கரம். களத்திலே நிற்கும் போராளிகளுக்கான எமது மனப்பூர்வ ஆதரவு. அல்லும் பகலும் அந்நியப் படைகளின் எறிகணைக்குள்ளும், வான் தாக்குதலுக்கு மத்தியிலும் இருந்தும் கணப்பொழுதும் பிரியாமல் அந்த விடுதலை வேங்கைகளுடனும் போராட்டத்துடனும் இரண்டறக்கலந்த அந்த வன்னி மக்களுக்கான எமது உளப்பூர்வமான ஆதரவினை தெரிவிக்கவேண்டும். எங்களுக்காக நீங்கள் அங்கே. எமக்காக அவர்கள் அங்கே. அவர்களுக்காக நாம்.....? என்ன செய்தோம். என்ன செய்கிறோம். என்ன செய்யவேண்டும். சிந்திப்போம். செயல்படுவோம். மிகுதியினை "தமிழினத் தலைவன்" எங்கள் சூரியத்தேவன் பிரபாகரன் பார்த்துக் கொள்ளுவான்.

பொருத்தமான நேரத்தில் இரண்டு கானொளிக்காட்சிகள்....!