Thursday, April 23, 2009

அது போன வாரம்..! இது இந்த வாரம்...!!

ஈழத்தின் கிழக்கு பகுதியில் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் இதுகாறும் இரண்டரை இலட்சத்திற்கு அதிகமான அப்பாவி பொதுமக்கள் வசித்து வந்தனர். இன்று அவர்களில் சுமார் ஒரு இலட்சம் மக்களை வல்வளைப்பு செய்து அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறது. இவர்கள், ஒரு வருடத்திற்கும் மேலாக மன்னார், வவுனியா போன்றவற்றில் இருந்து இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து பின்னர் கிளிநொச்சி வந்தடைந்து அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட முல்லைத்தீவை நோக்கி நகர்ந்து, அங்கிருந்து இறுதியாக சிறீலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அண்மைக்காலமாக வாழ்ந்து வந்தவர்கள்.

இங்கு வாழ்ந்து வந்த மக்களின் எண்ணிக்கையில் கொழும்பு அரசு எப்போதும் முன்னுக்கு பின்னான தகவல்களையே வழங்கி வந்தது. இந்த மக்களின் உண்மையான தொகையினை அந்த அரசால் அறிய முடியாத ஒன்றல்ல. மாவட்ட அரச அதிபர்கள் மூலமும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமும் அறிந்திருக்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கில் குறைவான எண்ணிக்கையையே (ஆயிரக்கணக்கில்) தெரிவித்து வந்தது. காரணம் உலக நாடுகளின் மனிதாபிமானம் குறித்த எச்சரிக்கையாகும். இருந்தும் விடுதலைப்புலிகளும் அங்கிருக்கும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமான கனகரத்தினம் அவர்களும் சரியான தொகையினை(இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான) தெரிவித்து வந்தனர். இதை சர்வதேசமும் செவிமடுக்கவில்லை. மாறாக அது கொழும்பின் மாயவலைக்குள் தன்னை மாய்த்து கொண்டது.

நேற்று சிறிலங்கா அரசு அறிவித்த தொகையில் ஒரு இலட்சம் மக்கள் பாதுகாப்புத்தேடி இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளனர் என்று அறிவித்துள்ளது. எந்த ஒரு ஊடகமும் இது குறித்து அவர்களை கேள்வி கேட்கவில்லை. முன்னர் ஒரு எழுபத்தையாயிரம் மக்களே உள்ளனர் என்று தெரிவித்து வந்த சிறீலங்கா அரசு இப்போது ஒரு இலட்சம் மக்கள் தமது பிரதேசத்துக்குள் வந்துவிட்டார்கள் என்கிறது. மேலும் அங்கே ஒரு சில ஆயிரம் மக்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளது. ஆனால் பன்னாட்டு செஞ்சிலுவை அமைப்பு மேலும் ஒரு அம்பதினாயிரம் மக்களுக்கு மேல் இருப்பதாக சொல்லியுள்ளது.

இலங்கை அரசு தமிழ்மக்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வந்துள்ளது. வெறும் அம்பதினாயிரத்திற்கும் குறைவான மக்களே இருந்தனர் என்று தனது கபடத்தன பிரச்சாரத்தை செய்து வந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கையுடன் சிறிலங்கா அரசின் முகமூடி மீண்டும் ஒருதடவை கிழிந்துள்ளது.

(இது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வந்த செய்தி.....)

ஹெகலிய ரம்புக்வெலவிடமோ அல்லது கோத்தபாய ராஜபக்ஷவிடமோ அல்லது சரத் பொன்சேகாவிடமோ ஒரு கேள்வியை கேட்டால் "இப்போது வந்துள்ள மக்களின் தொகை, நீங்கள் முன்பு சொன்ன மக்களின் தொகையை விட பன்மடங்கு அதிகம். அதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மேலும் 50000 ற்கு மேல் உள்ளது என்கிறது. உங்கள் கணக்கெடுப்பு பிழையே." அதற்கு அவர்கள் "அது போன வாரம்...இது இந்த வாரம்..முன்பு 40000 மக்கள் தான் இருந்தனர். இப்போது ஒரு இலடசம் மக்கள் வந்துள்ளனர். எமக்கும் குழப்பமாகத்தான் உள்ளது. இப்போழுது மேலும் ஒரு பத்தாயிரம் அளவிலான மக்கள் தான் இருப்பார்கள். அவர்களையும் விரைவில் மீட்டுவிடுவோம்."

இவர்கள் எப்போதும் நகைச்சுவைக்காரர்கள். இதிலே சர்வதேசம் மயங்கி அமிழ்ந்து போவதுதான் விந்தை.....!

Thursday, April 16, 2009

சக வலைப்பதிவர் உண்ணாவிரதம்.....!

அல்லும் பகலும் செத்து மடிந்து கொண்டிருக்கு ஈழத்தமிழன் நிலை மிகவும் வருந்தத்தக்கது. களத்திலே அவர்களின் துயரை எல்லாம் புலத்திலே வாழும் எம்தமிழ் உறவுகள் இந்த உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றனர். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரச அலுவலக முற்றுகை, தனித்தனியான பிரசாரம் என அவர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு செய்து கொண்டே இருக்கிறார்கள். இப்போது ஏராளமான இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற அகிம்சை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் இளம் பத்திரிகையாளரும் சக வலைப்பதிவாளருமான தெய்வீகன் மற்றும் 3 பேரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இவரது பத்தி எழுத்துக்கள் குறிப்பாக தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளியாகுவது அனைவரும் அறிந்ததே. இதை தவிர அங்குசம், அலையோசை என்ற இரு வலைப்பூக்களும் இவருக்கு சொந்தம்.

-----------------------------------------------------------------------------------

1987 ம் ஆண்டு தியாகி திலீபன் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்திலே எம் ஈழத்தமிழ் உறவுகளை கேட்டுக்கொண்டது இந்த மக்களின் எழுச்சியைத்தான். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" இதுதான் திலீபனின் தாரக மந்திரம். அது இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்துகொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தாயகத்தில் இந்த எழுச்சி உருவாக முடியாத சூழல். இன்று அனைத்து மக்களும் தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய நிலையில் அவர்களின் இந்த அளப்பரிய செயலுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதை தடுக்கவும், குழப்பவும் சிறி லங்கா அரச தூதுவராலயங்கள் பகிரதப்பிரயத்தனம் மேற்கொள்ளுகின்றனர். இருந்தும் ஆத்மார்த்தமான மக்களின் எழுச்சியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அது முடியவே முடியாது. இருந்தும் திரை மறைவில் அந்தந்த நாட்டு அரசுக்கு நச்சரிப்பதும் போட்டு கொடுப்பதும் என தன்னுடைய 'நரி' வேலைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

மக்களின் இந்த உளப்பூர்வமான எழுச்சிக்கு முன்னால் எல்லாம் தூசி என்பது அந்த வெள்ளைக்கார துரைக்கு மிக நன்றாக தெரியும். அவர்களும் இந்த உணர்வு பூர்வமான எழுச்சி போராட்டங்களையும், கோரிக்கைகளையும் நன்றாகவே அவதானித்து வருகிறார்கள். இந்த போராட்டங்கள் உடனடியாக எமக்கு ஏதாவது பெற்றுதர வேண்டும். இல்லையேல் அங்கு எமது வன்னி மக்கள் உயிர்களை குடிக்க சிறிலங்கா அரச படைகள் தயாராக உள்ளன. காலத்தை சிறிதளவு தன்னும் விரயமாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுப்போம். அந்தந்த நாடுகளில் எமது மக்களின் அமைப்புகள் என்ன என்ன செய்கிறார்களோ அதனோடு நாமும் இணைவோம். எம் மக்களைக் காப்போம். தாயகத்தை மீட்போம்.

-------------------------------------------------------------------------------------------

கடந்த வருடம் மாவீரர் தின உரையில் தேசியத்தலைவர் அவர்கள் இறுதியாக ஒன்றை தெரிவித்தார். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இளையோருக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்தும் தமது முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த தலைவனின் ஆணையை இன்று புலத்தில் வாழும் அனைத்து இளையோரும் நிறைவேற்றத் துடிப்பது போற்றுதலுக்குரியதே.

அன்பான உறவுகளே! இப்பொழுதுதான் பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரனின் உடல் நிலை மோசமடைவதாகவும் மக்கள் கண்ணீரோடு கனத்த இதயங்களோடு பார்வையிட்டு வணங்குவதாகவும் செய்தியை வாசித்தேன். நெஞ்சு உடைகிறது. துக்கம் தாள முடியவில்லை.

---------------------------------------------------------------------------------------

இன்றும் விடுதலைப் புலிகளின் பழைய பிழைகளை பேசி மகிழ்வோரும் (கலைஞர் ஐயா உட்பட), தற்கால பின்னடைவுகளை கண்டும் உள்ளம் பூரிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள். இவற்றை கருத்திலே எடுக்காமல் நடவடிக்கைகளை செய்வோம். எமக்கான காலம் காத்திருக்கிறது. களத்திலேயும், தளத்திலேயும் வெல்வோம்.

"தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!!"