Thursday, May 28, 2009

ஊடகங்களின் வெறுக்கத்தக்க போக்கு...!

நேற்றைய தினம் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இரவு நேர செய்திகளை கேட்டிருப்பீர்கள். கேட்காதவர்கள் இங்கே சொடுக்குங்கள்.

இதிலே எத்திராஜ் அன்பரசன் என்ற பிபிசி யின் நிருபர் நிறைய கேள்விகளை கேட்கிறார். அதற்கு மக்கள் பதில் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அவரின் கேள்விகளின் ஆழம் புரியவில்லை. வவுனியா தடுப்பு முகாம்களில் இருப்பவர்களுடனான் நேர்காணல் அது. இப்போது அங்கே என்ன நடைபெறுகிறது என எல்லோருக்கும் தெரியும். எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் நன்றாக பயன்படுத்தி உள்ளே மக்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயன்றிருக்க வேண்டும்.

இவரின் கேள்வி உள்ளே உங்களுக்கு யார் 'ஷெல்' அடித்தார்கள்? (இவருக்கு தெரியாது தானே..!) விடுதலைப்புலிகள் சுட்டார்களா? அய்யா, அவர்கள் இப்பொழுது சந்திக்கும் வேதனைகளை முன்னாலே கொண்டு வாருங்கள். கடந்த காலங்களை இப்போது சற்று கைவிடுங்கள். எல்லாம் முடிந்த நிலையில் இருக்கிறோம். யாருமற்ற நிலையில் இருக்கிறோம்.

மதிய உணவு மாலை 4.00 மணிக்கு கிடைக்கும் அவலத்தை உலக்கு நன்றாக தெரியப்படுத்துங்கள். இரவு உணவு நள்ளிரவு நேரம் கிடைக்கும் அவலத்தை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். குடிக்க , குளிக்க தண்ணீர் இல்லை. இந்த இழிநிலையை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். ஒரு முட்டு குடிசைகள் போட்டு 3000 குடும்பங்கள் ஒரு மைதான வெட்டவெளிக்குள், வெயில் சூட்டுக்குள் வாழ்கின்றனவே அதனை தெரியப்படுத்துங்கள். எந்த அடிப்படை வசதிகளுமற்ற கையகலாதவர்களாக வாழ்கிறார்களே அதனை வெளிப்படுத்துங்கள்.

உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் அருமையான சந்தர்ப்பம். அதனை மிகச்சரியான முறையில் பயன்படுத்தி உலகிற்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.

அதை விடுத்து மீண்டும் மீண்டும் நீங்கள் விடுதலைப் புலிகள் மீது சேறு பூச வேண்டும் என்பதற்காக உங்கள் கேள்விகளை உருவாக்கி மக்களிடம் செலுத்தாதீர்கள். யுத்த சத்தங்கள் முடிவடைந்த இந்நிலையில் 'ஷெல்' அடித்தது யார் ? என்ற கேள்வி உங்களுக்கு தேவைதானா? எந்தக் குழந்தையும் பதில் சொல்லும். ஆனால் அந்த மக்கள் அங்கே இருக்கும் நிலை தெரியுமா? நீங்கள் கேள்வி கேட்டு விட்டு வந்துவிடுவீர்கள். அவர்கள்தான் அங்கே காணாமல் ஆக்கப்படுவார்கள்.

நீங்கள் அதி புத்திசாலிகள் என்று உம்மை நினைக்கலாம். ஆனால் அந்த மக்களின் பதில்களில் இருந்து புரிந்து கொள்வீர்கள், மக்கள் எவ்வாறு மிகக் கவனத்துடன் நடந்து கொள்கின்றனர் என்று.

நேற்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருக்கும் தெரியும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை. ஆனாலும் அங்கே அனைவரும் இலங்கையை வெற்றி பெறச்செய்திருக்கிறார்கள். உங்கள் அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தை அழிப்பது சரியா? அது உங்கள் அகராதியில் நீதி என்று சொல்லப்படுகிறதா...?

பார்ப்போம் பொறுத்திருந்து. எல்லா முடிச்சுகளும் விரைவில் அவிழும். காத்திருப்போம். அன்று அழிந்து இந்தா இல்லை என்ற யப்பான் இன்று எழுந்து நெஞ்சை நிமித்து கொண்டு நிற்கிறார்கள். நாமும் நிற்போம்.

2 comments:

சோமி said...

//இதனை அவர்கள் நன்றாக பயன்படுத்தி உள்ளே மக்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர முயன்றிருக்க வேண்டும்.//

பிபிசி மற்றும் அன்பரசன் ஆகியோரின் மட்டுப்பாடுகள் சுய அரசியல் என்பவற்றுக்கு அப்பால் நீங்கள் சொன்னவற்றை கேட்கVஒ பேசவோ அனுமதியில்லை இராணுவமும் அதன் தமிழ் வாலுகளும் கூடவே வருகிறன. தான் எடுகிற துணிச்சல் வேணும்..... அது எப்பிடி வரும்.... அப்பிடி எடுத்த உரு ஊடகவியலாளர் இன்று நாட்டில் இல்லை அவ்ரி உபகரணங்கள் ராணூவம் வசம்...சனல் 4 க்கு நடந்த கதி தெரியும் தானே

லூசன் said...

//... சோமி said...
சனல் 4 க்கு நடந்த கதி தெரியும் தானே..//

வணக்கம் சோமி....!

இல்லை. அப்ப இலங்கை அரசு செய்வது சரி என்று எல்லோரும் தலையாட்டுவது போல் ஊடகங்களும் ஆட்ட வேண்டுமா? இப்பொழுது அந்த சனல்-4 தன்னுடைய ஒளிபரப்பில் தொடர்ந்து இந்தப் பிரச்சினை சம்பந்தமாக கதைக்க முன்வருவார்களா? இல்லையே. இப்படித்தான் எல்லோரும். தயவு செய்து உங்கள் நாடுகளில் இருக்கும் ஊடக சுதந்திரங்களை நன்றாக பயன்படுத்தி பிரச்சினைகளை வெளியில் கொண்டு வாருங்கள்.